விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவிப்பு
நாடு முழுவதும் காலியாகவுள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானது.
அந்த வகையில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாயின. இதில் மற்றவர்களை விட ஆளும் கட்சியான திமுக முந்திக் கொண்டு வேட்பாளர் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களை அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மக்களவை தேர்தலை போல இதிலும் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதை உறுதி செய்யும் வகையில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா மற்றும் பாமக சார்பில் சி.அன்புமணி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் வேட்பாளர் தேர்வு செய்வதில் ஆரம்பம் முதலே குழப்பம் நிலவியது.
இந்நிலையில் திடீரென்று அதிமுக இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.