Home » சனிக்கிழமையில் வரும் தை அமாவாசை! விரதம் இருக்க வேண்டிய முறைகள்

சனிக்கிழமையில் வரும் தை அமாவாசை! விரதம் இருக்க வேண்டிய முறைகள்

by Arun Kumar
0 comment
thai-amavasai-viratham

சனிக்கிழமையில் வரும் தை அமாவாசை! விரதம் இருக்க வேண்டிய முறைகள்

விரதம்

நமது முன்னோர்கள் வழங்கி விட்டு சென்ற சாஸ்திரங்கள் நாம் எவ்வாறு வாழ வேண்டும், இறை நம்பிக்கைகள் என பல விதமான வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்டில் வரும் முக்கியமான விரத நாட்கள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் சாஸ்திரத்தின் படி ஆண்டிற்கு 96 தர்ப்பணங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகணம் மற்றும் புரட்டாசி மகாளய பட்ச புண்ணிய காலமான 15 நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய 3 அமாவாசைகள்

ஆண்டில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், வருடத்தில் குறிப்பிட்ட 3 அமாவாசைகள் மிக மிக முக்கியமானவையாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய இந்த முக்கியமான மூன்று அமாவாசை தினங்களிலும் நாம் அனைவரும் மறக்காமல், முன்னோர் எனப்படும் பித்ரு ஆராதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

தர்ப்பணம்

இந்த குறிப்பிட்ட அமாவாசை நாளில், தர்ப்பணம் முதலான சடங்குகளை செய்து, நம் முன்னோரை நினைவு கூர்ந்து ஆராதித்து வணங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்போது முன்னோருக்கு எள்ளும் தண்ணீரும் விட்டு, தர்ப்பண மந்திரங்களைச் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அவர்களை வணங்கும் நமக்கு ஆசீர்வாதம் செய்வதற்காகக் காத்திருப்பார்களாம். எனவே, இந்தநாளில் மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்வோம்.

தை அமாவாசை

இந்த ஆண்டு தை அமாவாசை நாளானது 21 ஆம் தேதி (நாளை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் மேற்கூறிய வகையில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இவ்வாறு அவர்களை வணங்குவதன் மூலமாக  நமது முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். இந்தநாளில், நம்மை விட்டு சென்ற முன்னோரை ஆராதித்து, அவர்களுக்கு பூஜைகள் செய்து, அவர்களிடம் நம் வேண்டுதலை வைத்து முறையிடுவோம். அவர்களை நினைத்து பொதுமக்கள் சிலருக்கு உணவுப் பொட்டலம் வழங்குவோம். முக்கியமாக, இந்த நன்னாளில் தயிர்சாதப் பொட்டலம் தருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது என்று கருதப்படுகிறது.

நம் வழிப்பாட்டில் மகிழ்ந்த முன்னோர்கள் கருணையுடன் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த வகையில் முன்னோர்களை நாம் வழிபடுவதன் மூலமாக நம் வீட்டின் தரித்திரங்களெல்லாம் விலகி விடும். மேலும் இல்லத்திலிருந்த தீயசக்திகள் அனைத்தும் இடம் தெரியாமல் தெறித்து ஓடிவிடும். இவ்வாறு வணங்குவதால் கடன் தொல்லையில் இருந்து மீள்வோம். நம்மிடமிருந்து கவலையும் பயமும் காணாமல் போகும் என்பது உறுதி.

இந்த சிறப்பு வாய்ந்த தை அமாவாசை நாளில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அதையெல்லாம் வசதி இல்லாத ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நமக்கு நன்மைகள் பல வந்து சேரும்.

அமாவாசை நாளன்று மறைந்த நம்முடைய முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் மேற்கூறிய திதி, தர்ப்பண பூஜையானது, அடுத்து வரும் நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் தரப்படும் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷண சக்தி அல்லது ஈர்ப்பு சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, மேற்கூறிய இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது. அந்த வகையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பவர்கள் அனைவரின் வீட்டிலும் காரியத் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

சனிக்கிழமை வரும் தை அமாவாசை

அந்த வகையில் சனிக்கிழமை வரும் தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல ஏழைகளுக்கு தானம் அளிப்பதும் சிறப்பானது என்று கூறப்படுகிறது. இந்த நாளில் இல்லாதவர்களுக்கு கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உடைகள் மற்றும் பார்லி உள்ளிட்டவைகளை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசியானது நமக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. உலகில் தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள். அதே போல் தண்ணீர் தானமும் சிறப்பானது. இந்த நாளில் தேவையான மக்களுக்குத் தண்ணீர் தானமாக கொடுப்பது, குடிக்க இனிப்பு கலந்த தண்ணீர் கொடுப்பது மிகவும் சிறந்தது.

நம்மை விட்டு மறைந்த நாம் இந்த உலகத்தில் பிறக்க காரணமாக இருந்த நம்முடைய மூததையர்கள், முன்னோர்களை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா, பாட்டன் பூட்டன் என பல தலைமுறையினரை பெயரை நினைவில் வைத்து நாம் மேற்கூறிய வகையில் அவர்களுக்கு தர்ப்பணம் தரவேண்டும். 

அப்போது அரிசி, பருப்பு, காய்கறிகள் குறிப்பாக வாழைக்காய், குடை, வஸ்திரங்கள் மற்றும் காலணி உள்ளிட்ட பல பொருட்களை அவரவர் சக்திக்கு ஏற்ப மற்றவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளை குறித்தும் எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு நம்முடைய முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தின் மூலமாக நமக்கு இவ்வளவு நாளாக ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும். ஒவ்வொருவருக்கும் மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

You may also like

Seithiyukam Logo

Seithiyugam is the Best Online Newspaper and Magazine in Tamil with tons of updates and informations from different categories.

 

We are updating latest news from local districts, state, national, world, cinema, sports, business and lifestyle. 

Edtior's Picks

Latest Articles

Seithiyugam. All Right Reserved. Designed and Developed by Seithiyugam Media